
செவ்வாயின் துணைக்கோளைப் படம் பிடித்தது செவ்வாய்க்கலன் ...
செவ்வாயின் துணைக்கோளான போபாசை செவ்வாய்க் கலன் படம் பிடித்து அனுப்பியுள்ளது.
இஸ்ரோ, செவ்வாய்க்கலனின் பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்களில் இந்தச் சிறிய வீடியோ படம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
6,779 கிலோமீட்டர் விட்டம் கொண்ட செவ்வாய் கோளின் முன் 22 கிலோமீட்டர் மட்டுமே விட்டம் கொண்ட இந்த துணைக்கோள் சிறிய புள்ளியைப் போல் தெரிகிறது.
இந்தத் துணைக்கோள் செவ்வாய் கோளைச் சராசரியாக 6000 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. சூரிய மண்டலத்தில் ஒரு கோளை மிக அருகில் சுற்றிவரும் துணைக்கோள் இதுதான்.
நாளொன்றுக்கு மூன்று முறை செவ்வாய் கோளை இது சுற்றி வருகிறது. இந்தத் துணைக்கோள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் போது செவ்வாய் கோளிலிருந்து 66,275 கிலோமீட்டர் உயரத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கோளின் துணைக்கோள்களான போபாஸ், டெய்மாஸ் ஆகியவை 1877-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டன. இந்த இரண்டில் போபாஸ்தான் பெரியது. டெய்மாஸின் விட்டம் 12.6 கிலோமீட்டர் ஆகும். போபாஸ் என்ற கிரேக்க சொல்லின் பொருள் பயம் என்பதாகும். இது ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் செவ்வாய் கோளை நோக்கி 1.8 மீட்டர் தூரம் நகர்கிறது.
இதனால், அடுத்த 5 கோடி ஆண்டுகளில் இந்த துணைக்கோள் செவ்வாய் கோளின் மேல் மோதி வெடிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
போபாஸ் என்ற பெயரில் செவ்வாய் கோளிற்கு விண்கலங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
நன்றி - விடுதலை நாளேடு
No comments:
Post a Comment