” டொக் .. டொக் ... “
” புருஷன் வீடு தான்
இனி உனக்கு எல்லாமே “
பல்லிழந்த
வாயிலிருந்து
உதிர்ந்து
கொண்டிருந்தது
கிழவியின்
வார்த்தைகள்.
” எல்லாரையும்
அனுசரிச்சு
நடந்துக்கணும் “
உடைந்த குரலை
சரி செய்து சொன்னார்
அப்பா.
” சரி சரி நேரமாச்சி .. “
வேகப்படுத்தினான்
அண்ணன்.
குளமான கண்கள்
நெஞ்சத்தில் பதற்றம்
மகளை கட்டியணைத்த
அம்மாவுக்கு
அழுகையே
வார்த்தையானது .
ஆழ அகலமாய்
வேர் பரப்பிய
மரமொன்றை
கோடாரி கொண்டு
அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்
பக்கத்து வீட்டில்
.
டொக் .. டொக் ...
டொக் .. டொக் ...
டொக் .. டொக் ...
டொக் .. டொக் ...
- பாசு . ஓவியச்
செல்வன்
No comments:
Post a Comment