Sunday, 19 October 2014

‘தீபாவளி’... தமிழருக்குத் தீயவழியே !



‘தீபாவளி’... தமிழருக்குத் தீயவழியே !

தமிழனை வஞ்சகமாய்க் கொன்றகதை ‘தீபாவளி’ !
தரங்கெட்டுத் தமிழ்மகனே இதைநீயும் மறந்ததேனோ ?
இமியளவும் பண்பில்லா இனங்கெட்ட பார்ப்பனர்கள்
ஏற்றிவைத்த பொய்க்கதையை இன்றும்நீ சுமப்பதேனோ ?


தம்மினத்தைச் ‘சுரர்’என்றவர் தமிழினத்தை ‘அசுரர்’என்று
தருவித்த புனைசுருட்டைத் தமிழர்நாம் ஏற்கலாமோ ?
கும்மிருட்டில் நமைப்புதைக்கக் குருடரென நமைக்கொண்டே
குழிபறிக்கும் பகைவர்களின் கொடுஞ்செயலை நம்பலாமோ?

“நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா”யென
நம்தமிழப் பாவேந்தர் நவின்றாரே தெரியுமா ?
‘அரக்கரே’ என்றுநமை அழைத்த(அவ்) ஆரியர்கள்
அமைத்தே வைத்தவோர் பொய்விழா ‘தீபாவளி’ ;

இரக்கமே இல்லாத ஈனங்கெடு கயவரவர்
இந்நாட்டில் தாம்பிழைக்க ஏற்பித்த சூழ்ச்சிவழி !
உருப்படியாய் - மானத்திலே - உயர்ந்தபெரும் மாந்தர்களாய்
உலகத்திலே நாம்வாழத் தடையிடு(ம்)இத் ‘தீபாவளி’ !

வெகுநாளாய் நம்நாட்டில் பின்பற்றி வருவதனால்
விடுவதா இதையென்று வினவுகின்றார் வெட்கமிலார் !
வகைவகையாய் முன்பிருந்தே வருகின்ற காய்ச்சல்தானே,
வரட்டுமென விட்டிடாமல் மருத்துவத்தை நாடுவதேன் ?

தகவலிலும் அறிவுசார் துறைகளிலும் நிகழுகின்ற
தலைசிறந்த மாற்றங்களைப் பயன்படுத்தி மாறுவதேன் ?
புகவியலா ஆரியத்தின் புளுகுமிகு ‘தீபாவளி’
பொருத்தமில்லை தமிழர்க்கு, - புகன்றிடுநீ புரியாதவர்க்கு !

நம்தமிழன் இறந்தநாளில் நாம்இனிப்பை உண்ணலாமா?
நம்வீட்டு இழவுநாளில் நாம்மகிழ்ந்தே உழலலாமா ?
எம்மாந்தர் இவ்வுலகில் இழவுதனைக் கொண்டாடுவர் ?
எவ( ர் )அன்று சரவெடிகள் கொளுத்திமனம் களித்திடுவர் ?

பொம்மைபோல் நமைவைத்துப் பூரிப்பில் அவன்சிரிக்கப் -
புரியாமல் நாம்கூடப் புத்தாடை புனையலாமா ?
தம்மையே அறியாமல் தலைமுறையாய்ப் பின்பற்றும்
தன்மையிலாத் ‘தீபாவளி’ - தமிழருக்குத் தீயவழி !

- கொழுமம் ஆதி ( “உள்ளக் குமுறல்க்ள்” பா நூல்...)

No comments:

Post a Comment